2026ஆம் ஆண்டுவரை முதுநிலை ஆசிரியர் நியமனம் இருக்காது... அப்படித்தானே?

dpi campus
பள்ளிக் கல்வித்துறை வளாகம்
Published on

பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதாக திடீரென அறிவித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகவும் உடனடியாக போட்டித்தேர்வை நடத்தவேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் முதுநிலைb பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருக்கிறது; முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டுதான் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு சுமார் 2000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஆள் தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படாத நிலையில் 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே மாதம் முடிவடைந்து ஆறு மாதங்களாகியும் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவில்லை.” என்றும் அவர் குறைகூறியுள்ளார். 

”முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும். அதன் பின்னர் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதன்படி பார்த்தால் 2021 முதல் 2026 வரை காலியான இடங்களுக்கு புதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள்.” என கவலையோடு குறிப்பிட்டுள்ள இராமதாசு,

”இது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

”ஏற்கெனவே இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் முடங்கிக்கிடக்கின்றன. இப்போது பாடத்திட்ட மாற்றத்தைக் காரணம்காட்டி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தையும் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு அனைத்து காலியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com