மருத்துவமனைக்குப் போனவர்கள் மீது தாக்குதல்- ஒருவர் கொலை!

Rajkumar, Arakkonam
கொலையுண்ட இராஜ்குமார், அரக்கோணம்
Published on

மருத்துவமனைக்குச் சென்றவர்களை ஒரு கும்பல் தாக்கியதில் அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பாரஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி நேற்றுமுன்தினம் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரின் கணவர் இராஜ்குமார், மகன்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகியோர் பூங்கொடியை காரில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பெரியார் நகர் அருகில், எதிரில் அதீத வேகத்தோடு, தவறான பாதையில் வந்த வாகனம், இவர்களின் கார் மீது மோதியது. அதில் நிலைதடுமாறிய காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கிச்சென்ற இராஜ்குமார் குடும்பத்தினரை மோதிய வாகனத்தில் வந்தவர்கள் மருத்துவமனைக்குச் செல்லவிடாமல் தடுத்து, ஆபாச வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.

எந்த ஊர் என்று விசாரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜ்குமார், “தம்பி நாங்க பக்கத்தில் இருக்கும் பாரஞ்சி கிராமத்தை சேர்ந்தவங்க, வயசுக்காவது மரியாதை கொடுத்து பேசுங்க” என கேட்டு கொண்டதை சாதி ஆதிக்க வெறியில் இருந்தவர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் இராஜ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அருகில் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவு மக்களைத் திரட்டி கும்பல் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இந்த மோதலில் தாக்கப்பட்ட இராஜ்குமார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துவிட்டார். அவரின் இளைய மகன் செல்லமணி கை எலும்பு முறிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாரஞ்சி கிராம மக்கள், தங்கள் கிராமத்தினர் மீது நடத்தப்பட்ட சட்டவிரோத தாக்குதலுக்கும், ஒருவரை அடித்துக் கொன்று விட்ட கொடூரத்துக்கும் நீதியும், நியாயமும் வழங்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை விவரித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக நேரடியாக தலையிட்டு, சாதி ஆதிக்க வெறியை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதுடன், காரணமானவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கையினை உறுதியாக மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com