எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் காலமானார்!

ராஜேந்திர சோழன்
ராஜேந்திர சோழன்
Published on

எழுத்தாளர் அஸ்வகோஷ் என்கிற இராசேந்திர சோழன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

சென்னை, எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் தன் மகன் பார்த்திபன் வீட்டில் வசித்துவந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், முதுமை காரணமாக இன்று காலை காலமானார். அவரின் உடல் நீதிபதி பார்த்திபனின் குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் விருப்பப்படி, இன்று பிற்பகல் 3 மணியளவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கொடையாக ஒப்படைக்கப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் இராசேந்திரசோழன் 1945 டிசம்பர் 17 ஆம் தேதி தென்னார்க்காடு மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பிறந்தார். இருபது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று, திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில் வசித்துவந்தார்.

1971இல் 'ஆனந்த விகடன்’ நடத்திய தென்னார்க்காடு மாவட்டத்துக்கான சிறுகதைப் போட்டியில் 'எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்' என்ற கதை மூலம் அறிமுகமானார். மூன்று நாவல்களும் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளும் எழுதி வெளியிட்டுள்ளார்.

வடதமிழகத்து அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் ஒருவர்.

கதைகள் மட்டுமின்றி செம்மலர், தீக்கதிர், கண்ணோட்டம் ஆகிய இதழ்களில் கலை இலக்கியம், அரசியல், அறிவியல், தத்துவம் என ஏராளமான கட்டுரைகள் எழுதியவர்.

முன்னர் பெ.மணியரசன் தலைமையில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி எனும் அமைப்பில் முழு நேரமாகப் பணியாற்றிவந்தார். கருத்துவேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து தனியாக இயங்கிவந்தவர், உடல்நல பாதிப்பால் எழுத்துப்பணியில் ஈடுபட்டுவந்தார்.

இராசேந்திர சோழன் குறித்து கடந்த 2019ஆம் ஆண்டில் வம்சி, உமா கதிர் ஆகியோர் ஆவணப்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டுள்ளனர்.

இராசேந்திரசோழனின் மறைவுக்கு த.மு.எ.க.ச. சார்பில் அதன் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com