சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தை அடுத்து இராஜஸ்தானில் ஒருவழியாக பா.ஜ.க.வின் முதலமைச்சர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், முதல் முறை சட்டமன்ற உறுப்பினராகியுள்ள பஜன்லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டியில் இருந்த திவ்யகுமாரியும் பிரேம்சந்த் பைர்வாவும் துணைமுதலமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாதபடி இந்த முறைதான் முதலமைச்சர் யார் என முன்னிறுத்தாமலே, பா.ஜ.க. சட்டப்பேரவையை எதிர்கொண்டது.
முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியாவும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருந்துவந்த நிலையில், பத்து நாள்களாக இழுபறியாக நீடித்துவந்தது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. வசுந்தராவே இவரைப் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்று மாநில முதலமைச்சர் பதவி இழுபறியில், நேற்று, மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சர் பதவிக்கு 58 வயதான மோகன் யாதவ் பெயர் உறுதிசெய்யப்பட்டது. மத்திய இந்தியாவின் அடையாளமான ம.பி.யில் நான்கு முறை சுமார் 16 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்த சிவ்ராஜ் சிங் சௌகான், மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருடன் மத்திய அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமரும் போட்டியில் இருந்தார். ஆனால், அவரை சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் அமர்த்தியதுடன், சிவ்ராஜ்சிங்கின் அமைச்சரவையில் இருந்த மோகன் யாதவுக்கு பதவி அளிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 1ஆம் தேதி சத்தீஸ்கரில் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், அங்கு அனுபவம் வாய்ந்த பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் முதலமைச்சர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டார் என்பது நினைவிற்குரியது.