கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வி.சி.க. நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியின் கட் அவுட் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. அவரை அறியாத ஏராளமானவர்கள் இந்தக் கட் அவுட்டைப் பார்த்து கேள்வி கேட்டபடி இருந்ததைப் பார்க்கமுடிந்தது.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் வி.சி.க.வுக்கு எதிராக கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். திராவிடர் இயக்க ஆதரவாளர்கள் வெளிப்படுத்திவரும் இந்தக் கருத்துகளுக்கு எதிராகவும் பதில்கருத்துகள் காரசாரமாக வெளிப்படுகின்றன.
எழுத்தாளர் பெருமாள் முருகன், “ விசிக மாநாட்டில் ராஜாஜி உருவம் (கட்-அவுட்டுக்குத் தமிழ்ச் சொல்?) இடம்பெற்றது நல்ல விஷயம். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து மதுவிலக்குக்காகவே 'விமோசனம்' இதழ் நடத்தியவர். 1939இல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போது முதன்முதலாகச் சேலம் மாவட்டத்தில் (நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்டவை அடங்கிய பழைய சேலம் மாவட்டம்) மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியவர். அவர் மேல் பிற காரணங்களால் விமர்சனம் இருப்பினும் மதுவிலக்கு தொடர்பாக நினைவுகூரத் தக்கவரே.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”இராஜாஜி, ’சுப்பா நாயுடு’ என்று மதுவின் தீமையைப் பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளார்; அது மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது.” என்று எழுத்தாளர் ஆ. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார்.
”ராஜாஜிக்கு கட் அவுட் வைத்துவிட்டார்களாம். தி.மு.க.வினர் கதறுகிறார்கள். அந்த ராஜாஜியோடு கூட்டணி வைத்துதான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது என்பது மட்டும் உடன்பிறப்புகளுக்கு தெரியவந்தால்...” என்று ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.