புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமியை கொன்று சாக்கடையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ ஓட்டுநரான இவரது 9 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், கடந்த 2ஆம் தேதி வழக்கம்போல் தன் நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். அவர் மாலையாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காணாமல் போன சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் இருக்கும் கால்வாயில், சிறுமியின் உடல் கிடந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றிய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து, நேற்று இரவு விசாரணை நடத்தினர். அதில் 2 பேர் குற்றவாளிகள் என போலீஸ் தெரிவித்துள்ளது.
ஒருவர் பெயர் கருணாஸ் (19). உடந்தையாக இருந்தவர் விவேகானந்தன்(60) என்பதும் தெரியவந்தது.
சிறுமியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரின் உடலை வாங்க மறுத்து சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் முழுவதுமே அண்மைக் காலமாக போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் என பல தரப்பினரும் புகார் கூறுகின்றனர்.
இதற்கிடையே, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அந்தச் சிறுமியின் தந்தையைச் சந்தித்து, ஆறுதல் கூறினார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிகூறினார். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என சமூக ஊடகங்களில் ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.