ராஜ் கௌதமன்: சிகிச்சையாக அமைந்த எழுத்து- ரவிக்குமார் எம்.பி.

வன்னி அரசு, ராஜ் கெளதமன், ரவிக்குமார் (இடமிருந்து வலம்)
வன்னி அரசு, ராஜ் கெளதமன், ரவிக்குமார் (இடமிருந்து வலம்)
Published on

பேராசிரியர் ராஜ் கெளதமன் மறைவையொட்டி அவருடன் நீண்டகாலம் பழகியவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

“ராஜ் கௌதமன் மறைந்தார் என்ற செய்தியை ஜெகந்நாதன் அனுப்பியிருந்தார். அவரது உடல்நிலையை அறிந்திருந்ததால் இந்தச் செய்தி அதிர்ச்சி தரவில்லை. ஆனால் அவரோடு பழகிய நினைவுகள் மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கிவிட்டன.

மார்க்சியத்தில் நல்ல புலமை கொண்டிருந்த அவர் பின் நவீனத்துவ சிந்தனைகளை உள்வாங்கி தலித் பண்பாட்டு, இலக்கிய விமர்சனங்களிலும் , செவ்வியல் இலக்கிய ஆய்வுகளிலும் பயன்படுத்தினார். மார்க்சியம், பின் நவீனத்துவம், அம்பேத்கரியம் என்ற அபூர்வமான கலவையாக அவரது சிந்தனை வெளிப்பட்டது. அதுவும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் அவருக்கிருந்த புலமையும் அவரது சம காலத்தில் காத்திரமாக செயல்பட்ட கோவை ஞானி, எஸ்.வி.ஆர்., அ.மார்க்ஸ், தமிழவன் முதலானவர்களிலிருந்து அவரை வேறுபடுத்தச் செய்தது. அ.மாதவையா, இராமலிங்க அடிகள், பெண்ணியம், தலித் பண்பாடு, செவ்வியல் இலக்கியத் திறனாய்வுகள் - என அவரது ஆய்வுப் பரப்பு மிக மிக விரிந்தது. அவற்றைத் தமிழ்க் கல்விப் புலத்தினர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ( CICT) வழங்கும் விருதுகள் அவருக்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். அவரது பெயரை முன்மொழியும் அளவுக்கு அங்கே யாரும் இல்லை போலும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

1985 இல் புதுச்சேரிக்கு நான் வங்கிப் பணி நிமித்தமாக வந்தபோது அவரை முதன் முதலாக சந்தித்தேன். பின்னர் தினமும் சந்தித்துப் பேசும் நட்பாக அது மாறியது. நிறப்பிரிகை பத்திரிகையிலும் நான் முன்னெடுத்த தலித் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் அவர் பங்களிப்புச் செய்தார். அவரது இளைய மகள் கௌரி பத்து வயது ஆவதற்கு முன்பே திடுமென இறந்தது அவரை நிலைகுலைய வைத்தது. அதிலிருந்து அவரை மீட்பதற்கு அவரை எழுதச் செய்து நூலாக வெளிக்கொண்டு வருவதை ஒரு சிகிச்சைபோல நான் பயன்படுத்தினேன். தலித் பண்பாடு நூலை அப்படித்தான் வெளிக்கொண்டு வந்தேன். அவரையும் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களையும், சந்திரபோஸ் அவர்களையும் உரையாடச் செய்து அதை ஒலி நாடாவில் பதிவு செய்து எழுதி எடுத்து அந்த நூலில் சேர்த்தேன். காஞ்சிபுரம் போய் அன்பு அச்சகத்தில் அதை அச்சிட்டேன், இந்திரனிடம் கேட்டு அந்நூலுக்கான அட்டையை சென்னையில் அச்சிட்டு வாங்கி பைண்ட் செய்து புதுச்சேரியில் ஆயிரக் கணக்கானவர்கள் கூடிய தலித் கலை விழாவில் வெளியிடச் செய்தேன். பின்னர் கோத்தகிரிக்கு நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கோவையில் விடியல் பதிப்பகத்தில் தங்கியிருந்தபோது விடியல் மூலமாக ’அறம் அதிகாரம்’ என்ற நூலை வெளியிடச் செய்தேன். அதன் பின்னர் தமிழினி வசந்தகுமார் தொடர்ச்சியாக அவரது நூல்களைக் கொண்டுவந்தார்.

சில ஆண்டுகளாக உடல் நலிவால் அவர் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டார். அதையெல்லாம் மீறி அவர் இவ்வளவு காலம் வாழ்ந்ததற்கும் எழுதியதற்கும் அவரது மனைவி முனைவர் பரிமளம் அவர்களே முழுமுதல் காரணம். அவரது அரவணைப்பு இல்லாது போயிருந்தால் தமிழுக்கு இப்படியான பங்களிப்புக் கிடைத்திருக்காது.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சென்னையில் சிகிச்சை முடிந்து நெல்லைக்கு அவர் போகும் வழியில் விழுப்புரத்தில் அவரது காரை நிறுத்தி நானும் வன்னி அரசுவும் அவரை சந்தித்தோம். அதன் பின்னர் ஓரிரு முறை தொலைபேசியில் அவரோடு பேசினேன். தேரதல் முடிந்ததும் வந்து பார்க்கிறேன் எனக் கூறியிருந்தேன். தொகுதிப் பணிகள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. 

நான்கு நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற தகவலை ஜெகந்நாதன் தெரிவித்தார். போய்ப் பார்க்க வேண்டும் என மனம் விரும்பினாலும் எனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இருமலும் காய்ச்சலுமாக இரவெல்லாம் அவதிப்பட்டு அதிகாலை சோர்வில் தளர்ந்தபோது ஜெகந்நாதனின் செய்தி வந்தது. அது மேலும் என்னைப் பலவீனப்படுத்திவிட்டது. நினைவுகூர நல்ல விஷயங்களை மட்டுமே விட்டுச் செல்வது நட்பில் அபூர்வம். அத்தகைய அபூர்வ மனிதர் அவர். 

ராஜ் கௌதமன் அவர்களுக்கு என் அஞ்சலியையும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com