காவிரி விவகாரத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாகப் பேசலாமா என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.இரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரை பிரேமலதா சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்து ஊடகத்தினரிடம் பேசிய பிரேமலதா, காவிரியில் தமிழகத்துக்கான உரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் நதிநீர் இணைப்புதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்பதால் அதை வலியுறுத்தியதாகவு கூறினார்.
”கர்நாடகத்தில் அதிகப்படியான நீரை வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு விட மறுக்கிறார்கள்; தமிழ்நாட்டுக்கும் தமிழக முதலமைச்சருக்கு எதிராகவும் அவர்கள் செய்கின்ற விசயங்கள் கண்டனத்துக்கு உரியது; நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறார். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தச் சொல்கிறார். இதுவே கண்டனத்துக்குரியது. தமிழர்களை கர்நாடகத்தில் அடிக்கிறார்கள் எனக் கேட்டால், இதற்கு நான் என்னப்பா செய்வது என நகைச்சுவையாகப் பேசுகிறார், துரைமுருகன். இது நகைச்சுவை கிடையாது. மிகமிக உணர்ச்சிமயமான விசயம் இது. உரிமையைத் தரவேண்டியது மைய, மாநில அரசுகளின் கடமை. விவசாயிகளைக் காக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை” என்றும் பிரேமலதா கூறினார்.
இத்துடன், நெய்வேலி மின்சார நிறுவனம், மீனவர் பிரச்னை, தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை பற்றியும் ஆளுநரிடம் மனு அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.