தமிழக மீனவர்க்கு ரூ.3.5 கோடி அபராதம்- கட்சிகள் சொல்வது என்ன?

political parties condemn for fine to tamilnadu fishermen by srilankan court
தமிழக மீனவர்கள் மீதான அபராதத்துக்கு கட்சிகள் கண்டனம்
Published on

இலங்கையில் அத்துமீறி மீன் பிடித்த வழக்கில் தமிழக மீனவர்கள் 12 பேருக்குதலா 1.5 கோடி ரூபாய் அந்நாட்டுப் பணத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ஒரே வழக்கில் குறிப்பிட்ட பேருக்கு மட்டும் இவ்வளவு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தம் கண்டனத்தையும் கோரிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். 

பா.ம.க. தலைவர் அன்புமணி


”வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில்  12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி (இந்திய மதிப்பு ரூ. 1 கோடி)  அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மீனவர்கள் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மீதமுள்ள 10 மீனவர்கள் தொடர்பான வழக்கு வரும் 10-ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்களை ஒடுக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. ஒரு மீனவர் தொடர்ந்து ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களின் குடும்பம் பொருளாதார அடிப்படையில் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்?  மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும்.

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பது தான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.”
 

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

”தூத்துக்குடி, தருவைக்குளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி ஒரு படகில் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். அதேபோல, 23 ஆம் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 22 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு கடந்த 5 ஆம் தேதி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும், இரண்டு படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம் நடத்தியதோடு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், மீனவர்களை விடுதலை செய்ய மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் முதலில் 12 மீனவர்களுக்கு தலா ரூபாய் ஒன்றரை கோடி, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தலா ரூபாய் 42 லட்சம் அபராதம் செலுத்தவும், அப்படி செலுத்த தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பின்படி 12 பேருக்கும் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூபாய் 5 கோடியே 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு படகில் இருந்த 10 மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையில் இருக்கிறது. அவர்களுக்கும் அபராத தொகை விதிக்கப்படும் என்று தெரிகிறது. இது தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த காலங்களில் பலமுறை தமிழக அரசின் சார்பாக எழுதப்பட்ட கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற வகையில் இலங்கை அரசு செயல்படுவதை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் மோடி அரசு வேடிக்கை பார்ப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன்

” இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரதிர்ச்சி தருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை. இப்போது இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெற்றுள்ள மீனவர்கள் தலா ரூ.42 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது கற்பனைக்கு எட்டாத தாக்குதலாகும். தமிழக மீனவர்களை ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும்.

ஒன்றிய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். இலங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, தூதரகம் மூலமாக ஒன்றிய அரசு சட்டரீதியான உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com