விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர், முதலமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

நடிகர் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த்
Published on

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்துக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது சிறப்பான நடிப்பால் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தவர். ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது மறைவு, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதை நிரப்புவது கடினமாக இருக்கும். பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பராக இருந்த அவருடனான எனது தொடர்புகளை, நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களுடன் இருக்கிறது.

ராகுல் காந்தி

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. சினிமா மற்றும் அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு. கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும். திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.

எடப்பாடி பழனிச்சாமி - அ.தி.மு.க. பொதுச்செயலாளர்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்

தொல்.திருமாவளவன் - வி.சி.க. தலைவர்

திருமாவளவன், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தேமுதிக தலைவர் அண்ணன் விஜயகாந்த்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. விஜயகாந்தை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

கே.எஸ்.அழகிரி - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், புரட்சிக் கலைஞருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமிழ் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக அவர் திகழ்ந்தார். அதேபோல, அரசியலில் கால் பதித்து புதிய பாதையில் பயணித்து தனக்கென தனி வாக்கு வங்கியை திரட்டி, அதன்மூலம் பல அரசியல் மாற்றங்களுக்கு கருவியாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த்.

அன்புமணி ராமதாஸ் - பா.க.ம. தலைவர்

தே.மு.தி.க-வின் நிறுவனரும், தலைவருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, அனைவரின் மனங்களையும் வென்றவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, அதன் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் மீதும் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட எனக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர். அரசியலையும், திரைவாழ்வையும் கடந்து விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர்.

அனைவரையும் சமமாக மதித்தவர். ஒரிரு நாள்களில் வீடு திரும்புவார்; அரசியல் பணியை தொடர்வார் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை; தாங்க முடியவில்லை. அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளரும், மனைவியுமான சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ. பன்னீர்செல்வம் - முன்னாள் முதல்வர்

'புரட்சிக் கலைஞர்' என்றும், 'கேப்டன்' என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர். சாதி, மத பேதமின்றி ஏழையெளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் பல நிகழ்ச்சிகள்மூலம் சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒரு இருட்டறை, ரமணா, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் போன்ற வெற்றிபடங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். தனியாக ஒரு கட்சியைத் துவக்கி, சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகாந்த் அவர்கள். அவருடன் அரசியல் ரீதியாக நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு.

கமல்ஹாசன்- மக்கள் நீதி மையம் தலைவர்

தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

திமுக எம்.பி கனிமொழி

தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

நிர்மலா சீதாராமன் - மத்திய நிதி அமைச்சர்

மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன் - அ.ம.மு.க. பொதுச்செயாளர்

சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும்.

இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com