இயக்குநர் மோகனைக் கைதுசெய்வதா?- விடுவிக்கச் சொல்கிறார் இராமதாஸ்!

PMK Ramadass
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
Published on

பஞ்சாமிர்த சர்ச்சையில் கைதுசெய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் மோகன்ஜியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

”தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யூட்டியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரைப்பட இயக்குநர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.” என்று அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

”இயக்குநர் மோகன் அளித்த நேர்காணலைப் பார்த்தவர்களுக்கு அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும். யூட்டியூப் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில், ’’புகழ்பெற்ற கோயில் ஒன்று தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால்தான் நான் இதைச் செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி தெரிவிக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக்கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றுதான் கூறியிருக்கிறார்.

இயக்குநர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொதுநலன் கருதி கூறியதை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளைப் புரிந்துகொண்டு மோகனைக் கைதுசெய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும்.” என்றும் இராமதாசு கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com