தியானம் செய்யும் பிரதமர் மோடி
தியானம் செய்யும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று முதல் தியானம்: 3 நாள்களுக்கு என்ன சாப்பிடுகிறார்?

Published on

கன்னியாகுமரியில் விவேகானந்தர் தவமிருந்த பாறையில் பிரதமர் மோடி 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார். இதையொட்டி, 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன, மக்களவை தேர்தல் முடியும் நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு தொடர்ச்சியாக, 45 மணி நேரம் தியானம் செய்ய உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று மாலை 3.55 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு 4.35 மணி அளவில் வருகிறார். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு, மாலை 5.30 மணி அளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்கிறார். விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வழியில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி ஜூன் 1ஆம் தேதி மாலைவரை, தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் மேற்கொள்கிறார். ஜூன் 1ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், தியானக் கூடத்திலிருந்து வெளியே வருகிறார். பிறகு, மாலை 3.30 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில், 8 எஸ்.பி.க்கள் அடங்கிய 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் கன்னியாகுமரியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலாப் பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் இன்று முதல்3 நாள்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com