தி.மு.க. மீது கடும் ஊழல் அட்டாக் - பிரதமர் மோடி பேச்சின் பின்னணி என்ன?

வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி
வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி
Published on

சென்னையில் நேற்று கார் உலா வாக்கு சேகரிப்பை முடித்த பிரதமர் மோடி, இன்று வேலூர், மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டங்களில் பேசினார். 

வேலூர் கோட்டையில் இன்று முற்பகல் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டார்.  

பின்னர், அங்கிருந்து விமானப் படை விமானத்தில் கிளம்பிய அவர், கோவை, மேட்டுப்பாளையத்துக்குச் சென்றார். அங்கு தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளின் பா.ஜ.க. வேட்பாளர்களுக்காக வாக்குக்கேட்டுப் பேசினார். 

முன்னதாக வேலூர் கூட்டத்தில், தி.மு.க.வைக் காட்டமாகத் தாக்கிய பிரதமர் மோடி, இந்த முறை ஒரு படி மேலே போய், தி.மு.க.வின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி தடைபடுகிறது என்றும் குறிப்பிட்டார். 

”விண்வெளி, உற்பத்தி துறைகளில் நாட்டை முன்னேற்றுவதில் தமிழ்நாடு கடுமையாக உழைக்கிறது. ராணுவத் தளவாட உற்பத்திப் பகுதி மூலமாக தமிழ்நாட்டை பெரிய அளவில் முன்னோக்கிக் கொண்டுசெல்லும்.

உதான் திட்டப்படி வேலூரில் மிக விரைவில் விமானநிலையம் வரவுள்ளது. சென்னை- பெங்களூரு தொழில் வழித்தடமானது வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதன்மூலம் வேலூர் இன்னும் நவீன வளர்ச்சி அடையும்.” என்றவர், 

”ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரே குடும்பத்தினுடைய சொத்தாக இருக்கிறது. அவர்களின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டு இளைஞர்கள் முன்னேற முடியாமல் கிடக்கிறார்கள். ஊழல், குடும்ப அரசியல், தமிழக கலாச்சாரத்துக்கு எதிராகச் செயல்படுவது ஆகிய மூன்று செயல்பாடுகளால் இந்த மாநிலத்தை அவர்கள் பின்னோக்கிக் கொண்டுசெல்கிறார்கள்.

ஊழலில் தி.மு.க. காப்புரிமை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதைத் தவிர, அந்தக் குடும்பம் வேறு எந்த வேலையையும் செய்வதில்லை.” என்றும் சாடினார். 

மேலும், ”தமிழ்நாட்டில் மணல் கொள்ளை மூலம் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4,300 கோடி அளவுக்கு அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு ஏராளமான நிதியைக் கொடுக்கிறது. அதிலும், தி.மு.க. ஊழல் செய்துவருகிறது.” என்றும் பிரதமர் மோடி முதல் முதலாக தி.மு.க. ஆட்சி மீது நேரடியாகவே கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். 

அத்துடன், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள்கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்கப்படுவது வேதனையை அளிக்கிறது. போதைக்கடத்தல் கும்பல் யாருடைய பாதுகாப்பில், எந்த குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று பூடகமாகவும் மோடி கடுமையாகப் பேசினார். 

பிற்பகலில் பேசியபோதும், தி.மு.க.வின் ஊழல் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவே மோடி குறிப்பிட்டார். 

முன்னதாக, பா.ஜ.க. அரசு தி.மு.க. உட்பட்ட எதிர்க்கட்சியினர் மீது மட்டும் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றை ஏவி, அரசியல்ரீதியாகப் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என்று கடந்த இரு வாரங்களாக இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர் பிரச்சாரம் செய்துவந்தனர். 

அதைப் பற்றி பா.ஜ.க. தரப்பில் எந்த பதிலும் பேசாமல் நழுவிய போக்கைக் கடைப்பிடித்த நிலையில், பிரதமர் மோடி இந்தியா கூட்டணியின் முதன்மையான கட்சியான தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது பிரச்சாரக் களத்தை சூடாக்கியுள்ளது.   

logo
Andhimazhai
www.andhimazhai.com