விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23ஆம் தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.
மாநாடு நடத்துவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் கடந்த மாதம் 28-ஆம் தேதி விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. திருமால், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி ஆகியோரிடம் தனித்தனியே மனுக்களை அளித்தாா்.
மாநாடு ஏற்பாடுகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற 21 கேள்விகளுக்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு, புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி எஸ்.சுரேஷ் செப்டம்பர் 2ஆம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக, சட்ட நிபுணா்களுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி எஸ்.சுரேஷிடம் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் நேற்று முன்தினம் மாலை கட்சி சாா்பில் தயாா் செய்யப்பட்டிருந்த பதில் கடிதத்தை வழங்கினாா்.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு காவல் துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. மாநாடு நடத்துவதற்கான அனுமதிக் கடிதத்தை தவெக வழக்குரைஞரிடம் விழுப்புரம் மாவட்ட காவல் துறை வழங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.