பா. ரஞ்சித்
பா. ரஞ்சித்

எதிரா நிறுத்துறீங்களே...! வேதனைப்பட்ட பா.ரஞ்சித்!

Published on

“அண்ணன் திருமாவளவனை எனக்கு எதிராக நிறுத்துவது கவலையாக உள்ளது.” என்று இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச் சாலையில் இருந்து ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் வரையில் நேற்று பேரணி நடந்தது. இதில், மாநில அரசுக்கு எதிராகவும், தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நினைவேந்தல் கூட்டம் நடந்தது.

பேரணிக்கு தலைமை தாங்கிய பா.ரஞ்சித், நினைவேந்தல் கூட்டத்தில் பேசியதாவது,

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்வால் கலவரம் வரும் என்று எழுதினார்கள். இந்த கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தில் இப்படி எழுதினார்களா என்று சந்தேகம் எழுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். தலித் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கவிடாமல் செய்கிறார்கள். நீதி கட்சி காலத்திலிருந்து இப்போது வரை எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ன.? எங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று கேள்வி எழுப்பினால், எங்களை 'பி' டீம் என்கிறார்கள். நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். அதனால், நாங்கள் யார் பின்னாலும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாரை பார்த்தும் பயப்படமாட்டோம். எங்களுக்கான விடுதலை வேட்கை காலம் காலமாக இருந்து வருகிறது.

இந்த சமூகத்தை சரிசெய்ய இப்போது இல்லை; ஆண்டாண்டு காலமாக பணி செய்து வருகிறோம். அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி என்றால் நாங்கள் எல்லாம் ரவுடிகள் தான். அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் எங்களை காயப்படுத்த வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல மறைமுக சூழ்ச்சிகள் இருக்கிறது. அதை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

சென்னையின் மிகப்பெரிய அங்கமாக ஆம்ஸ்ட்ராங் திகழ்ந்தார். சென்னையை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. கிட்டதட்ட 40% மேல் தலித்துகள் உள்ளனர். நாங்கள் விழிப்புணர்வு அடையும்போது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டி இருக்கும். அவரின் மரணம் நிச்சயம் எதிரொலிக்கும்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள்
பேரணியில் கலந்துகொண்டவர்கள்

ஆம்ஸ்ட்ராங் இந்து மதத்துக்கு எதிராக களமாடியவர். பெளத்தராக செயல்பட்டிருக்கிறார். இந்த கோணத்திலும் வழக்கை விசாரிக்க வேண்டும்.

உங்கள் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரான அடிமைகள் கிடையாது நாங்கள். இங்கே மேயராக ஒருவர் உள்ளார். நீங்கள் தி.மு.க.வில் இருப்பதால் மட்டும் மேயராகிவிட முடியாது. இடஒதுக்கீடு என்ற ஒற்றாலேயே நீங்கள் மேயராக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எல்லாம் தலித்துகளுக்கு ஆதரவாக பேசவில்லை என்றால் எதற்காக இடஒதுக்கீட்டை பயன்படுத்தி வெற்றி பெறுகிறீர்கள்.?

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜுக்கும் இந்த துறை உருவாக காரணமாக இருந்தவரே அம்பேத்கர்தான் என புரிய வேண்டும். தலித்களாகிய இவர்கள் இந்தப் பிரச்னையில் ஏன் மௌனம் காக்கிறார்கள்? உங்களால் தைரியமாகக் குரல் கொடுக்க முடியாதா?

எத்தனை நாட்கள் தான் தலித் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும், எம்.பி.க்களும் அடிமைகளாகவே இருக்கப்போகிறீர்கள்..? நீங்கள் குரல் கொடுத்தால் எதற்காக நான் இங்கே வந்து பேசப்போகிறேன். திருமாவளனுக்கு எதிராக நாங்கள் ஒருநாளும் இருக்க மாட்டோம். எங்களின் குரல் நீங்கள். உங்களை நாங்கள் ஒருநாளும் கைவிடமாட்டோம். பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிரானவர்கள் நாங்கள். நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டிய தேவை இருக்கிறது.

திமுக மட்டும் அல்ல, எல்லா கட்சிகளும் எங்களை ஏமாற்றியுள்ளன. எந்த கட்சியும் எங்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. கம்யுனிஸ்ட் கட்சி உட்பட.

இனி தலித் பிரச்னைகளை தலித் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வந்து பார்க்கவில்லை என்றால் அவர்களை முற்றுகையிடுவோம். மற்ற சாதிகளின் பிரச்னையும் தலித்துகளின் பிரச்னையும் வேறு." என்று ரஞ்சித் கூறினார்.

இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், முன்னாள் நீதிபதி அரி.பரந்தாமன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய குடியரசு கட்சித் தலைவர் சே.கு. தமிழரசன், சமூக சமத்துப்படை கட்சித் தலைவர் சிவகாமி, ஆதித்தமிழ கட்சித் தலைவர் ஜக்கையன், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,திரைப்பட நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டிருந்த குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com