அ.தி.மு.க. பெயர், கட்சிக் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதுவதால், அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, சின்னம் உள்பட்டவற்றைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு கோரியது. இதற்கு தனி நீதிபதி அனுமதி மறுத்தார்.
இதையடுத்து ஓ.பி.எஸ். தரப்பில் இன்று இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற வெள்ளிக்கிழமை இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு கூறியுள்ளது.