நடத்துனர் ஓட்டுநருக்கு தெரியப்படுத்தாமலேயே ஆன்லைன் முன்பதிவு செய்யப்படுவதாக மாற்றுத்திறனாளி உரிமைகள் மற்றும் சமூக ஆர்வலரான எஸ். நம்புராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய https://www.tnstc.in/ இணையதளம் உள்ளது. இதன் மூலம் 02.05.2024 மாலை 3.30 மணிக்கு ஈரோடு நகரில் இருந்து புறப்பட்டு இரவு 8.58 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை செல்வதாகக் காட்டப்பட்ட கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கரூர் பணிமனை ரூட் எண்.1054A பேருந்தில் ரூ.194/- ஆன்லைனில் செலுத்தி முன்பதிவு செய்திருந்தேன். PNR No/B54117832
மாலை 3.15 மணிக்கு ஈரோட்டில் பேருந்தில் ஏற முயன்றபோது அங்கு நின்றிருந்த ஓட்டுனரிடம் செல்பேசியில் வைத்திருந்த முன்பதிவுக்கான மெசேஜைக் காட்டி, இருக்கை எண்.24ஐ கேட்டேன். அவர், "இப்பேருந்தில் முன்பதிவு இல்லையே" என்றார். சிறிது நேரத்தில் பேருந்து அருகே வந்த நேரக் காப்பாளர் உடையணிந்திருந்த அதிகாரியிடம் கேட்டேன். அவரும் "இப்பேருந்தில் முன்பதிவு இல்லையே என்று கூறியதுடன், டிக்கட்டுக்கான சலான் சீட்டு வைத்திருக்கிறீர்களா?" எனக் கேட்டார். ஆன்லைன் முன்பதிவில் மெசேஜ் மட்டுமே வரும் என நான் கூறியதற்கு, "இப்படி எதையாவதுக் காட்டி சீட் கேட்டால் நாங்கள் எப்படி தருவோம்?" என பொறுப்பில்லாமல் கூறினார். அப்போது நடத்துனர் அங்கே வந்தார். அவரும், "இப்பேருந்தில் முன்பதிவு கிடையாது. எங்களுக்கு எந்த தகவலும் இல்லை" எனக் கூறினார். பின்னர் நான் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருந்த டிக்கட்டைக் காட்டியபோது ரூட் எண் உள்ளிட்டவற்றை சரிபார்த்துக் கொண்டு, "உங்கள் டிக்கட் இந்தப் பேருந்துக்கானதுதான்" என ஒப்புக்கொண்டு, நான் வைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டை அவரது செல்பேசி மூலம் போட்டோ எடுத்துக் கொண்டு, என்னை இருக்கையில் ஏறி அமரச் சொன்னார். இருக்கை எண்ணைத் தேடியபொழுது, பேருந்தில் இருக்கை எண்களே இல்லை. காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன். ரூ.165/-க்கான பயணச்சீட்டு தனியாக நடத்துனர் தந்தார். அதற்கு அவர் தொகை பெறவில்லை. ஆன்லைன் முன்பதிவின்படி, "மதுரை மாட்டுத்தாவணி வரை பேருந்து செல்லும்தானே?” எனக் கேட்டேன். இல்லை. ஆரப்பாளையம் வரைதான் செல்லும் எனக் கூறி அங்கே என்னை இறக்கிவிட்டனர்.
இதன் மூலம் எனக்கு மன உளைச்சலும், அசவுகரியமும் ஏற்பட்டது. மேலும், நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்ட போக்குவரத்துக ஊழியர்களுக்கு எந்த அறிவிப்பும் செய்யாமலேயே ஆன்லைன் முன்பதிவு நடைமுறையை அரசு செயல்படுத்துகிறது என்பதை அறிய முடிந்தது. எனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மேற்கொள்ள போக்குவரத்து துறையின் அரசுக் கூடுதல் தலைமை செயலாளர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு குளறுபடி நடப்பதாகப் பலரும் குற்றம்சாட்டுவதைப் பார்க்க முடிகிறது.
சென்னையை சேர்ந்த வெங்கட் என்பவரும் இதேபோன்று ஒரு குற்றைச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து அவரிடம் பேசினோம், “கடந்த 2ஆம் தேதி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சிக்கு இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்தேன். என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு டிக்கெட்டுக்கான தொகை ரூ.1390 எடுத்துக் கொண்டார்கள். ஆனாலும், டிக்கெட் முன்பதிவாகவில்லை. அதற்கான காரணத்தை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தளத்தில் உள்ள கட்டணமில்லா எண்ணிற்குத் தொடர்பு கொண்டேன், அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பத்து நாளுக்குள் பணம் திரும்பி வரும் என்கிறார்கள்.” என்றார்.
பொதுப் போக்குவரத்தை நம்பி இருக்கும் சாதாரண மக்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இப்படி அலைக்கழிப்பது மக்கள் விரோதமானது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.