ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் அனைத்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்துவது தேசிய கட்சிகளுக்கு சாதகமாகவும், மாநிலக் கட்சிகளுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் , சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டால், பா.ம.க.வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ”அப்படி ஒருமசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு இன்னும் அறிக்கை சமர்பிக்கவில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைக்குப் பிறகு கருத்து தெரிவிக்கின்றேன்.
நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடந்தால் அது தேசிய கட்சிகளுக்கு சாதகமாகவும் மாநில காட்சிகளுக்கு பாதகமாகவும் இருக்கும். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், 2024இல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துங்கள். 2026இல் நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துங்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு தேர்தல். அந்த முறை சரியாக இருக்கும்.” என்று கூறினார்.
தமிழக அரசு செயல்படுத்தி உள்ள குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமத்தொகை திட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, “இது நல்ல திட்டம். வரவேற்கிறோம். இது ஒரு நலத்திட்டம். ஆனால் ஒரு நலத்திட்டம் மட்டுமே போதுமானது கிடையாது. வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வர வேண்டும். ஒருவருக்கு ஒரு மீனை கொடுத்தால் அவர் அன்றைக்கு அதனை சாப்பிடலாம். ஆனால் ஒருவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவர் வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம்.இந்த நலத்திட்டம் என்பது மீன் கொடுப்பது போலானது தான். மீன்பிடிக்க கற்று கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தற்போது நாம் தண்ணீருக்காக கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கெஞ்சுகிறோம். தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு மழை உள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 950 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. சென்னையில் 1050 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. சென்னையை பொறுத்தவரை பெய்யும் மழையில் 70 சதவீத தண்ணீர் கடலுக்கு செல்கிறது. நீரை சேமித்தாலே வாழ்வாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு பெருகும். அதனால் இதுபோன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாறாக நலத்திட்டங்கள் கொண்டு வந்து பெருமையாகப் பேசுவது என்பது வேறு. அது அரசியல் செய்வது. நான் இந்த திட்டத்தை தப்பு சொல்லவில்லை. ஆனால் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வாருங்கள் என கூறுகிறேன்.'' என்றார் அன்புமணி ராமதாஸ்.