விருதுநகர் மாவட்டத்தில் இன்றும் பட்டாசு விபத்து, ஒருவர் பலி... முடிவே இல்லையா?

fire accident at vembakkottai fire works, Virudhunagar
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு விபத்துகோப்புப் படம்
Published on

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் மீண்டும் இன்று காலையில் ஒரு பட்டாசு ஆலை வெடிப்பு விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 27 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். 

நூறு சதவீதம் அளவுக்கு படுகாயம் அடைந்த 19 வயது இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதே வெம்பக்கோட்டை அருகில் குண்டாயிருப்பு எனும் ஊரில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெடிப்பு விபத்து ஏற்பட்டது. விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில், 100 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த இடத்தில், விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள்.

இதே மாவட்டம் சாத்தூர் வட்டம் சிந்தப்பள்ளி கிராமத்தில் பிப்ரவரி 24அன்று பட்டாசு ஆலை வெடிப்பு விபத்து நேர்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 5 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இப்படி மீண்டும் மீண்டும் விருதுநகர் மாவட்டத்தின் பல இடங்களில் பட்டாசு ஆலை வெடிப்பு விபத்து தொடர்கதையாகி வருகிறது.  

மாவட்ட ஆட்சியர்கள் மாறினாலும் நடவடிக்கை என்று கூறினாலும் விபத்துகள் நின்றபாடில்லை.  

செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் அப்பையநாயக்கன்பட்டி கிராமம், ஆகாஷ் நகரைச் சேர்ந்த திரு.கோவிந்தராஜ் (வயது 27) த/பெ. கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் நூறு சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் குருமூர்த்தி (வயது 19) த/பெ. பாண்டி என்பவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

அவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டுள்ள அவர், அவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் குருமூர்த்தி என்பவருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.          

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com