நா.த.க.விலிருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!

NTK Villupuram North District Secretary Sukumar
நா.த. க.விலிருந்து விலகிய விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார்
Published on

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு. பிரபாகரன் உட்பட பலர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த பொறுப்பாளர்கள் இப்போது ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செலாளர் சுகுமார் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன்.

2015இல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 தொகுதி செயலாளர் ஆகவும் 2020 இல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தோம்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம்.

அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளரை நிரப்பினோம். கட்சியின் கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.

இதுநாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும்படி இல்லை, இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.

அண்ணன் கூறியது: “இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள். உங்களை யாரும் போஸ்டர் ஓட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை.” என்று கூறினார்.

ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை. எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அணைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com