வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் எழுதியுள்ள கடிதத்தில், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், போக்குவரத்து தடை, மண்சரிவு போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை பராமரித்து அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக பருவமழை தொடங்குவதை ஒட்டி, பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.