தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக என இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.