திமுகவுடன் விரிசல் இல்லை... ஆதவ் விவகாரத்தில் திருமா பதில்!

Aadhav Arjuna - Thol.Thirumavalavan
ஆதவ் அர்ஜூனா - தொல்.திருமாவளவன்
Published on

“திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழாது. எழுவதற்கு வாய்ப்பும் இல்லை. ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்து தொடர்பாக கட்சியின் மூத்த தோழர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம்.” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக திமுக - விசிக இடையே விரிசல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்த வீடியோ வைரலானது.

அதைத் தொடர்ந்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பின. கூட்டணிக் கட்சிகள் இணைந்து பெற்ற வெற்றியை தங்களது சுய வெற்றிபோல திமுக பிரசாரம் செய்தது தவறு என்றும் வட மாவட்டங்களில் விசிக கூட்டணி இல்லாமல் திமுக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்றும் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உட்பட விசிக தலைவர்களே ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்து மௌனம் காத்துவந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே எந்தச் சலசலப்பும் இல்லை. எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை.

என்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடமளித்து விட்டது. அதனால் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழுதாது; எழுவதற்கு வாய்ப்பும் இல்லை.” என்றவரிடம் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆ.ராசா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு திருவாவளவன், “ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுப்போம். உட்கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலை குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசி உள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்துபேசி அதுதொடர்பான முடிவுகளை எடுப்போம்." என்றவர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com