5 பேர் பலிக்கு யாரையும் குறை சொல்ல முடியாது... செய்தியாளரின் கேள்விக்கு டென்ஷன் ஆன மா.சு.!

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “சென்னை விமான சாகச நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இறந்தவர்கள் ஐவருமே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்து போகவில்லை. இறந்துதான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். 15 லட்சம் மக்களும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் வந்துவிட முடியாது. எங்கெல்லாம் விமான சாகச நிகழ்ச்சி தெரியுமோ அங்கிருந்ததெல்லாம் கூட மக்கள் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கே வராத சிலர்தான் பூதக்கண்ணாடியை வைத்து குற்றம் கண்டுபிடிக்கின்றனர். எனவே இதை அரசியலாக்க வேண்டாம்.

இது முழுக்க முழுக்க இந்திய விமானப்படையின் நிகழ்ச்சி. அதனால்தான் அவர்களையும் நாம் குறைசொல்லிவிட முடியாது. வெயில் இருக்கும் என்று தெரிந்துதான் தொப்பி, கண்ணாடி அணிந்து வாருங்கள் என்று அவர்களும் முன்பே கூறியிருந்தார்கள். இந்தியாவின் விமானப்படை கட்டமைப்பை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி இது. இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் வெயில் தாக்கமும், நீர்ச்சத்து குறைபாடும்தான். மருத்துவ வசதி இல்லையென்று சொல்லமுடியாது. காரணம் மெரினாவுக்கு அருகே தான் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என அனைத்தும் உள்ளது. இப்படி ஒரு கட்டமைப்பு உலகத்திலேயே எங்கும் கிடையாது.

சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தலா ஒருவரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது.

7500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.” என்றவரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பு முற்பட்டபோது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் சடுக்கென எழுந்துச்சென்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com