தலைநகர் சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று கன மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்று நிலை மாறுபாட்டால் காற்றழுத்தத் தாழ்வு நிலை தெற்கு ஆந்திரத்தை நோக்கி இடம் மாறுகிறது. இதனால் இங்கு கனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் எனும் தனியார் வானிலை ஆய்வாளரின் கணிப்புப்படி, கன மழை அபாயம் இப்போதைக்கு சென்னையைவிட்டு நீங்கியது என அவரின் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”காற்றழுத்தத் தாழ்வு நிலை சென்னையைக் கடந்துசெல்லும் என்றாலும், இதன் வடக்குப் பகுதியில்தான் காற்று குவிந்தபடி இருக்கிறது என்பதால், சென்னைவாசிகள் சற்றே நிம்மதி அடையலாம். காற்றழுத்தம் காரணமாக வரக்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பில்லை; ஆனால் வழக்கமான மழை பெய்யக்கூடும்.
காற்றின் திசை தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் இதனால் ஏற்படும் மழை சென்னையில் வரும்; அது சமாளிக்கக்கூடியதாகவே இருக்கும். எனவே, பாலங்களில் நிறுத்திவைத்துள்ள கார்களை வீட்டுக்குக் கொண்டுபோகலாம். சென்னை, திருவள்ளூரில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் சென்னையில் சில இடங்களில் அதிகபட்சமாக 30 செ.மீ. அளவுக்கு மழையளவு பதிவாகியுள்ளது.” என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த சென்னைவாசிகள் மழைபாதிப்பு அச்சத்திலிருந்து சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
அப்பாடா தப்பித்தோம் என்கிறபடியாக காலை முதல் சமூக ஊடகங்களில் சென்னைவாசிகள் தங்கள் உணர்வைப் பதிவிட்டுவருகின்றனர்.