பாலியல் தொல்லை: அலட்சியம் காட்டிய நிர்வாகம்....தூங்காமல் போராடிய மாணவர்கள்!

students protest
விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
Published on

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக(என்ஐடி) விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ஐடி மாணவிகள் விடுதி மின்விநியோகத்தில் நேற்று பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விடுதி நிர்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளரை பழுது நீக்கும் பணிக்கு அழைத்துள்ளனர். பணியில் ஈடுபட்ட அந்த தொழிலாளி, மாணவி ஒருவா் தனியாக அறையில் படித்துக்கொண்டிருந்தபோது, அவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். அவா் சத்தம் போட்டதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த மாணவிகள் திரண்டு வந்தனர். இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு விடுதி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனா்.

இதனிடையே, விடுதி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், விடுதி காப்பாளரை மாற்றக் கோரியும் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அந்த ஒப்பந்த தொழிலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. விடுதி காப்பாளரை மாற்றும் வரை போராட்டம் நடத்துவோம் என மாணவர்கள் அறிவித்துள்ள நிலையில், திருவெறும்பூர் வட்டாட்சியர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com