நீலகிரி வாக்குப்பதிவு இயந்திர மையத்தில் சி.சி.டி.வி செயலிழப்பு- காரணம் என்ன?

நீலகிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்த சி.சி.டி.வி.
நீலகிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்த சி.சி.டி.வி.
Published on

நீலகிரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் சி.சி.டி.வி. செயல் இழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்பி ஆ.இராசா, பா.ஜ.க. சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நீலகிரி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கல்லூரியைச் சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் எனப்படும் இந்த அறையைச் சுற்றிலும் 160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு அனைத்து சிசிடிவி கேமராக்களின் காட்சியும் ஒரே நேரத்தில் தடைபட்டது. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் 20 நிமிடங்களில் பழுதைச் சரிசெய்தனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா அளித்த பேட்டியில், ”சிசிடிவி கேமரா நேரலை தடைபட்டபோது நான் சம்பவ இடத்தில்தான் இருந்தேன். நேரலை அமைப்பின் உபகரணங்களில் அதிக வெப்பம் காரணமாக டி.வி.களுக்கு வரும் நேரலைதான் தடைப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவுசெய்வதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை. நேரலை தடைபட்ட 20 நிமிடங்களும் என்ன நடந்தது என்பதை சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளன. தேவைப்பட்டால் அரசியல் கட்சி முகவர்கள் அதைப் பார்த்துக்கொள்ளலாம்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com