செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக இன்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை ஆளுநரிடம் பரிந்துரை செய்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்தார். இதில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்கு பதில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர்.
மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதில் செந்தில் பாலாஜி மற்றும் நாசர் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு ஆளுநர் ரவி பதவி பிராமணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு:
* வி.செந்தில் பாலாஜி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
* கோவி. செழியன் - உயர்கல்வித்துறை
* இரா.ராஜேந்திரன் - சுற்றுலாத்துறை
* சா.மு.நாசர் - சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர், அதிகாரிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.