நீட் தேர்வு முறைகேடு: மறுதேர்வு நடத்த டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரன்
Published on

குளறுபடிகளும், முறைகேடு புகார்களும் நிறைந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, உடனடியாக மறுதேர்வை நடத்த வேண்டும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை என பா.ஜ.க. தலைவர்கள் சொல்லி வரும் நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள டி.வி.வி. தினகரன் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) குளறுபடிகளால் கேள்விக்குறியாகும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவு – முறைகேடு புகார்கள் நிறைந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.

2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், அந்த தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேசிய அளவில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்திருப்பதும், அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்திருப்பதும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளில் ஏற்பட்டிருக்கும் கருணை மதிப்பெண் குளறுபடிகளையும் இணைத்து பார்க்கும் போது நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அத்தேர்வை எதிர்கொண்ட மாணவ, மாணவியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீட் தேர்வின் போது லட்சக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்ட நிலையில், நீதிமன்றத்தை நாடியவர்களுக்கும், தேர்வு முகமையை அணுகியவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்கியிருப்பதாக தேசிய தேர்வு முகமை கூறுவது எந்த வகையில் நியாயம்? எனவும் எதன் அடிப்படையில் அந்த கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன? எனவும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் நீட் தேர்வில் ஆண்டுதோறும் நடைபெறும் குளறுபடிகளாலும், அத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் அடுத்தடுத்த தவறான நடவடிக்கையாலும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, குளறுபடிகளும், முறைகேடு புகார்களும் நிறைந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, உடனடியாக மறுதேர்வை நடத்துவதோடு, அடுத்து வரும் ஆண்டுகளில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com