நீட் வழக்கு... அடுத்த கட்ட நகர்வு என்ன?– மா.சு. விளக்கம்

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவம்-நல்வாழ்வுத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா சிகிச்சையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 10 முறைக்கும்மேல் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர்கல்வித் துறைக்கும், மருத்துவக்கல்வித் துறை நிர்வாகத்திற்கும் தொடர்ந்து 7 முறை விளக்கங்கள் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறோம்.

சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி அதற்கான பதிலையும் முறையாக அனுப்பி வைத்திருக்கிறோம். எனவே மத்திய அரசு, குடியரசு தலைவரிடத்தில் சொல்லி மாநில அரசுகள் விரும்புகிற வரையில் நீட் தேர்விலிருந்து விலக்கு தரவேண்டும் என்கின்ற வகையில் முடிவெடுப்பார்கள் என்று கருதுகிறோம்.

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் 67 மாணவர்கள் எடுத்துள்ளனர். தேர்விற்கான மதிப்பெண்கள் வழங்கும் விதிமுறைப்படி மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கினாலும் 718, 719 என மதிப்பெண்கள் வராது. 716 அல்லது 715 என்ற முறையில் தான் வரும். நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதுபோன்று வழங்குவதற்கு எப்போது உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது என்பது குறித்து எந்த வித தெளிவான விளக்கமும் இல்லை. தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கத்தினை ஏற்க முடியாது.

நீட்டுக்கு எதிரான போராட்டம் என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது வருகிறது. நீட் தேர்வில் தவறு நடக்கவில்லை என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல உள்ளது. நீட் தேர்வில் குளறுபடிகள் குறித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்வது குறித்து சட்டத் துறையுடன் ஆலோசனை செய்து வழக்கு தாக்கல் செய்யப்படும்.” என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com