சென்னைக்கு வருகிறது என்சிஎம்சி அட்டை... டிக்கட்டுக்கு இதுவே போதும்!

NCMC cards on MTC buses in Chennai
சென்னைப் பேருந்துகளில் என்சிஎம்சி கார்டுகள்
Published on

பேருந்துகளில் ஏறினால் முக்கியமான பிரச்னை, சில்லறைதான். சில்லறை இல்லை என பயணிகள் சொல்வதும், நடத்துநர்கள் சொல்வதும் பதிலுக்கு இரு தரப்பிலும் பயணம் முடிவதுவரை பஞ்சாயத்து ஓயாமல் இருப்பதும் இன்றுவரை தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

இந்த சூழலில், என்சிஎம்சி எனப்படும் தேசிய பொது போக்குவரத்து அட்டைகளை ஒரு மாதத்தில் நடைமுறைக்குக் கொண்டுவர சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் மின்னணு முறையில் பயணச்சீட்டு பெறமுடியும்.

முன்னரே இந்தப் பயண அட்டையை அறிமுகப்படுத்த மா.போ.கழகம் முயற்சியைத் தொடங்கியது. ஆனால், பயணச்சீட்டு இயந்திரங்களுடன் இந்த அட்டையை ஒருங்கிணைப்பதில் சிக்கல்கள் நீடித்தன. இப்போது அது களையப்பட்டு புதிய முறையைச் செயல்படுத்துவதற்கான தயார் நிலைக்கு மா.போ.க. வந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் மின்னணு முறை மூலம் பயணச்சீட்டு வழங்குவது நடைமுறைக்கு வந்தது. அதாவது, எந்த யுபிஐ கணக்கையும் வைத்து பணத்தைச் செலுத்தாமல் பயணிகள் தங்களுக்கான சீட்டை வாங்கிக்கொள்ளலாம். குறிப்பாக, சில்லறைத் தொல்லை இல்லை.

இப்போதைய நிலவரப்படி, யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் ஒரு சதவீத அளவுக்கு பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதாக மா.போ.க. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பணம் இல்லாமல் அதிகமாக மின்னணு முறை மூலம் பயணச்சீட்டுகளை வழங்கும் மூன்று நடத்துநர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

ஆனாலும், இணைய இணைப்பு வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை என்கிற நிலையில், இதைப் பயன்படுத்துவதில் சிரமும் உள்ளது. அதையும் மீறி எப்படியாவது புதிய முறையைக் கொண்டுவருவது என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com