நெல்லை, தூத்துக்குடி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து இயக்குநர் மாரிசெல்வராஜ் மீட்பு பணியில் ஈடுபட்டது சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கு மாரில் செல்வராஜ் பதில் அளித்துள்ளார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் அந்த மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் இணைந்து மீட்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஈடுபட்டார்.
அமைச்சர்களுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அதிகாரிகளைத் திரைப்பட இயக்குநர் வேலை வாங்குகிறார் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,”நிதியமைச்சரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது படத்தை இயக்கிய மாரி செல்வராஜுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய ஆய்வுக்கெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்சன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.” என்று விமர்சித்திருந்தார்.
இந்த விமர்சனத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது.” என்று பதிவிட்டுள்ளார்.