முதல்வர் மருந்தகம் ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வரும்!

muthalvar medicals
முதல்வர் மருந்தகம்
Published on

’முதல்வர் மருந்தகம்’ அமைப்பதற்கான இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் சுதந்திர நாள் விழாவின்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதியன்று முதலமைச்சர் தலைமையில் இதுகுறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் ஆகிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விரைவுபடுத்த உத்தரவிட்டார். 

இதில், முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம்சார்ந்த மற்ற மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உட்பட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள  B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அரசுத்தரப்பு நம்பிக்கையோடு தெரிவித்துள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com