போலி ஆவணங்களைத் தயாரித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அரசு செலவில் அலுவலர்களைப் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக துணை வேந்தராக இருப்பவர் ஜெகநாதன். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழை புறக்கணித்தது, தனியாருக்கு முக்கியத்துவம் அளிப்பது, அரசு அனுமதி இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்படுகிறது.
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், சேலம் காவல்துறைக்குப் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், ஜெகநாதன் சட்டவிரோதமான முறையில், பல்கலைக்கழகத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், கருப்பூர் காவல் நிலையத்தினர் ஜெகநாதனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜெகநாதன் பத்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கு அரசு அலுவலர்களைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.