எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு ஹிட்லர் கையாண்ட வழியை மோடி பின்பற்றுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்துக்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களிடம் கையெழுத்தைப் பெற்றார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அந்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியதாவது:
“இந்தியாவில் காஷ்மீரில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை பல்வேறு மாநில அரசுகள் உள்ளன. ஆனால், பா.ஜ.க.வின் ரெய்டு என்பது எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களுக்குத்தான் வருகிறதே தவிர; ஆளுங்கட்சி ஆளும் மாநிலங்களுக்குச் செல்வதே கிடையாது. இது விதிமுறை மீறல், சர்வாதிகாரப் போக்கு. எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்காக ஹிட்லர் கையாண்ட வழி, முசோலினி எதை செய்தாரோ அதை மோடி செய்கிறார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அல்லது அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் மாநிலங்களில் ரெய்டு நடந்தால் வரவேற்கலாம். ஆனால், அப்படி இல்லையே. தமிழகத்தில், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான கோப்புகள் ஆளுநரிடம் இருக்கிறது. அந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார். அ.தி.மு.க.வினர் ஊழல் செய்திருந்தால், அதை விசாரிக்க ஆளுநர் ஒத்துக் கொள்ளமாட்டார். ரெய்டு அனைத்தும் எதிர்க்கட்சிகள் பக்கம் இருக்கிறதே தவிர அவர்கள் பக்கம் இல்லை.
அமைச்சர் எ.வ.வேலு கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தின் சாலைகளை மிகத் தரமாகப் போட்டிருக்கிறார். அந்தச் சாலைகளை மத்திய அரசு சோதித்துப் பார்க்கலாம். சாலைகளைத் தரமாக இருப்பதால் அவர்கள் அதைப் பார்ப்பது இல்லை. இதுபோன்ற அரசியல் ரீதியான குறுக்கீடுகளைச் செய்ய நினைக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. நாங்கள் எதிர்பார்த்ததைத்தான் பா.ஜ.க.வினர் செய்கின்றனர்.” என்று அழகிரி கூறினார்.