வரலாற்றுத் திரிப்பும் வெறுப்பு விதைப்பும்... அமரன் படம்!

Amaran Movie
அமரன் திரைப்படம்
Published on

அமரன் திரைப்படத்தில் வெறுப்பின் விதைப்பும் வரலாற்றுத் திரிப்பும் இடம்பெற்றுள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சி சாடியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

”அண்மையில் வெளிவந்துள்ள அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரம் தீட்டி அந்த வெறுப்பின் வீச்சை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் பரப்பும் நுண்ணிய கருத்தியல் பயங்கரவாதத்தை கைக் கொண்டிருக்கிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

”காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற கயமைத்தன படங்களின் கருத்தியலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கலைநயமாக ஏற்றியுள்ள படமாக அமரன் இருப்பதை முற்போக்கு விமர்சகர்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளனர்.

உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களை எடுத்தும் அவற்றில் நடித்தும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பயங்கரவாத களங்கத்தை கலை நுட்பத்தோடு சுமத்தி, கண்டனத்திற்கு ஆளான கமலஹாசனின் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அவரைத் தேர்தலில் வென்ற பாஜக நிர்வாகி திருமதி வானதி சீனிவாசன் இப்படத்தை பள்ளிக்கூடங்களில் திரையிட வேண்டும் என்று பாராட்டுகிறார்.

பிஞ்சுகளின் நெஞ்சுகளில் நஞ்சுகளை விதைக்கும் சக்திகளின் செயல் திட்டத்தில் வெளிப்பட்ட வார்ப்படமே இந்த போர்ப்படம் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று இருக்க முடியும்?”என்று ஜவாகிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

”காஷ்மீரில் 'பாதி விதவைகள்' என்ற கொடூர வாழ் நிலையில் நடைப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அபலைப் பெண்களை இப்படம் கலை என்ற பெயரால் களங்கப்படுத்துகிறது. மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள வன்ம மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர். பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள் மீது அணுவளவும் அனுதாபம் காட்டாமல் அவர்கள் அத்தனை பேருமே பயங்கரவாதிகள் என்று இப்படம் சித்திரிப்பது எத்தனை கொடுமை..!” என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

”அடிமை இந்தியாவின் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதிலும் சுதந்திர இந்தியா சந்தித்த பல போர்க்களங்களிலும் தங்கள் இன்னுயிரை ஈந்து இம்மண்ணிற்காக களமாடிய பல்லாயிரம் முஸ்லிம்களின் வரலாறுகளைப் படித்து வெள்ளைகாரனுக்கு வால் பிடித்தும் கால் பிடித்தும் வாழ்ந்த கூட்டம் தேசப்பற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.

1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் திருமணமான சில நாள்களிலேயே பங்கேற்ற நமது ராணுவ வீரர் ஹவில்தார் அப்துல் ஹமீது பாகிஸ்தானில் 8 ராணுவ டாங்கிகளை சிதறடித்து விட்டு தனது இன்னுயிரை நீத்தார்.

அவருக்கு இந்திய அரசின் உயர் ராணுவ விருதான பரம்வீர் சக்கரா விருதும் வழங்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டின் அரசு 'கெஜட்'டிலும் அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

கார்கில் போரிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குன்னூர் அப்துல் சத்தார் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள், நம் தமிழர்கள் நம் நாட்டிற்காக உயிர் துறந்துள்ளனர்.

இந்திய தேசியக் கொடியை அரை நூற்றாண்டு காலம் ஏற்காத, தனது அலுவலகத்தில் ஏற்றாத ஒரே அமைப்பு ஆர் எஸ் எஸ் சங்பரிவார அமைப்பாகும். அதன் வழித்தோன்றல்கள் முஸ்லிம்களுக்கு தேசப்பற்று குறித்து பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

மாவீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீர தீர தியாகத்தை மதித்து போற்றுவோம், அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த உயிர்க் கொடையாளர்களுக்கு இத்தகைய வெளிச்சம் தரப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ இதுபோலத்தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள்

சினிமா என்ற செயற்கை இருளை வீசி அவர்களின் உரிமைப் போராட்டத்தை திரிப்பதும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறைப்பதும் அவர்களை பயங்கரவாதிகளாக தொடர்ந்து மக்கள் மனத்தில் விதைப்பதும் அறிவு நாணயம் அற்ற அயோக்கியத்தனமான செயலாகும்.

துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற கேடுகெட்ட படங்கள் செய்த அதே திரிபுவாதத்தை அமரன் என்ற திரைப்படமும் செய்திருப்பதை சான்றுகளோடு நிரூபிக்கிறது.

சங்பரிவாரமும் அவர்களின் அரசியல் பிரிவான பாஜகவும் பாராட்டுகின்ற எதுவும் தமிழர்களுக்கு நன்மையானதல்ல, சமூகநீதிக்கு எதிரானது என்ற எளிய நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் வரவேண்டும்.

மதவாத ஒன்றிய பாஜக அரசு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி தந்த அரசியல் சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்ததை நியாயப்படுத்துவது கலையல்ல நீதியின் கொலை ஆகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கூறுகளைக் கொண்ட இப்படத்தை பல தலைவர்களும் அதன் நுண்ணரசியல் அறியாமல் இப்படத்தை பாராட்டி இருப்பதும் வேதனைக்குரியது. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்.

வெறுப்பை விதைக்கின்ற வரலாற்றைத் திரிக்கின்ற திரைப்படங்களின் மூலம் சமூக நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தும் வேலையை திரைப்படத்துறையினர் இனியும் தொடரக்கூடாது.” என்றும் ஜவாகிருல்லாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com