தலைநகர் சென்னையில் தேசிய கட்சியான பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதில் கைதானவர்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும், தி.மு.க. கூட்டணிக் கட்சியான வி.சி.க. தலைவர் திருமாவளவனும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக ஊடக இரங்கல் குறிப்பில், ” பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,” கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது; வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே, இன்று காலையில் சென்னை மருத்துவக் கல்லூரி இராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஜரானவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை; இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும்; சரண் அடைந்தவர்களைக் கைதுசெய்துவிட்டோம் என்கிற அளவிலே புலன்விசாரணையை நிறுத்திக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்.
”கொல்லப்பட்டஆம்ஸ்ட்ராங் பொது மக்களின் பிரச்னைக்காகத் தலையிட்டிருக்கிறார்; அதனால் அவருக்குப் பகை ஏற்பட்டிருக்கும், முன்விரோதம் இருக்கும். இது போலீசுக்கு நன்றாகத் தெரியும். உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கியிருக்க வேண்டும். ” என்றும் அவர் கூறினார்.