தி.மு.க. அணியில் விவாதம் இருக்கும், விரிசல் இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு!

cm mkstalin
மு.க.ஸ்டாலின்
Published on

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் பேரனும் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி மகனுமான கோ. ஸ்டாலின் – யுவஸ்ரீ ஆகியோரின் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தலைமையேற்று நடத்திவைத்தார்.

நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசுகையில், வழக்கம்போல அரசியலையும் எடுத்துவைத்தார்.

அவரின் பேச்சிலிருந்து...

” மக்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கக்கூடிய திரு. பழனிசாமி அவர்கள் பொறாமை தாங்க முடியாமல், திராவிட முன்னேற்றக் கழகம் அரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து மக்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து கொண்டிருக்கிறதே; இன்னமும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கின்ற பொறாமையின் காரணமாக செல்லாக்காசாக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்கள் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்ல, திமுக-வின் கூட்டணி விரைவில் உடையப்போகிறது; இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பழனிசாமி அவர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!

எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம்;  எங்களுக்குள் பல விவாதங்கள் நடக்கின்றபோது அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது! விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை; விரிசல் ஏற்படாது. மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல இன்றைக்கு பக்கத்து கட்சியில்; தன்னுடைய கட்சியை எப்படி வளர்ப்பது என்ற யோக்கியதை இல்லை; வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய கட்சியைப் பார்த்து வளர்ந்து இன்றைக்கு மக்களிடத்தில் ஓங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கக்கூடிய நம்முடைய இயக்கத்தைப் பார்த்து, நம்முடைய அரசை பார்த்து, இன்றைக்கு ஜோசியம் பார்த்து கொண்டிருக்கக்கூடிய பழனிசாமி சொல்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். இப்போது ஆட்சி என்கின்ற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கும் மக்களை சந்தித்து, மக்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டறிந்து அந்தப் பணிகளை செய்கிறோம்.

சென்னையில் மழை வந்தது. முதலமைச்சராக நான் வந்தேன். துணை முதலமைச்சராக இருக்கும் தம்பி உதயநிதி வந்தார். அமைச்சர் பெருமக்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்தார்கள். அதேபோல, ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைபேரும் மக்களைத் தேடி வந்தார்கள். குறைகளை கேட்டார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள். இது தி.மு.க. ஆனால், மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் நம்முடைய பழனிசாமி அவர்கள். அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வரமாட்டார். ஏதோ கனவு கண்டிருக்கிறார். அதற்காக ஜோசியம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
திமுக-வை பொறுத்தவரைக்கும், கூட்டணி என்று சொன்னால், அது கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. கனவு காணவேண்டாம். உறுதியாக சொல்கிறேன். 2026 மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.” என்று ஸ்டாலின் பேசினார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com