மகளிர் 33% ஒதுக்கீட்டில் பட்டியலின இடத்தை காலிசெய்து விடுவார்கள்- மு.க.ஸ்டாலின் ஊகம்!

தஞ்சை தி.க. பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின்
தஞ்சை தி.க. பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின்
Published on

மகளிருக்கான 33% ஒதுக்கீட்டில் பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டையும் வரும்காலத்தில் காலிசெய்து விடுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசு மீது அச்சம் தெரிவித்தார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் அவருக்கு இன்று மாலையில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, தி.க. தலைவர் கி.வீரமணி அவருக்கு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் எனும் பட்டத்தை வழங்கினார். தாய்வீட்டில் கலைஞர் எனும் வீரமணி தொகுப்பில் உருவான நூலை ஸ்டாலின் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தேர்தல் வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீர வேண்டும்.” என்றார்.

” கல்வி உரிமை - நிதி உரிமை - சமூகநீதி உரிமை - மொழி உரிமை - இன உரிமை - மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறார்கள்.

மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி - நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்றால் நம்முடைய உரிமையை எடுத்துச் சொல்ல - உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள். இந்த எண்ணிக்கையானது கூட வேண்டுமே தவிர - குறையக் கூடாது.

அதே போல் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் பா.ஜ.க. முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர்  இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது என்பது பா.ஜ.க.வின் உயர் வகுப்பு மனோபாவம்! காலப்போக்கில் பட்டியலின இடஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது.” என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com