சிறுபான்மையினர் தொடர்பான சீமானின் பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், ’சங்பரிவார் அமைப்புகளின் திட்டத்துக்கு சீமான் துணைபோவதாக வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன் எம்.பி அப்போது பேசியதாவது, “எல்லா நாடுகளிலும் சிறுபான்மையினர் என்கிற ஒரு சமூகப் பிரிவினர் இருக்கவே செய்கிறார்கள். சிறுபான்மையினரை பொதுவாக உலக அளவில் மதத்தின் அடிப்படையில்தான் அடையாளப்படுத்தப்படும் நிலையைப் பார்க்கிறோம்.
தமிழ்நாட்டிலே நாம் மொழி அடிப்படையில் பார்த்தால், தமிழர்கள் பெரும்பான்மை; அதில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பெரும்பான்மைக்குள் வருவார்கள் என்று மொழி - இன அடிப்படையில் சீமான் ஒரு வாதத்தை வைக்கிறார்.
இந்தியாவில் மத அடிப்படையில்தான் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற அரசியல் நடக்கிறது. ஆர். எஸ். எஸ். இந்துக்களை பெரும்பான்மை என்றும் முஸ்லிம், கிறித்துவர்களை சிறுபான்மையினர் என்றும் சொல்கிறது. பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் சொல்லும்படிதான் சிறுபான்மையினர் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் அரசியல் செய்கிறார்கள். அந்த அரசியலை இது திசைதிருப்புவதாக இருக்கிறது.
சீமான் சொல்லுவதில் தர்க்கம் இருக்கிறது. ஆனால் நடைமுறைச் சாத்தியமாக எந்த அரசியல் கூறுகளும் இல்லை.
உலகம் முழுவதும் மத அடிப்படையில்தான் பெரும்பான்மை, சிறுபான்மையைப் பார்க்கிறார்கள். மொழி அடிப்படையில் தேசிய இன முரண்கள் இருக்கின்றன என்றாலும்கூட, மொழியின் அடிப்படையில் இன அடிப்படையில் சிறுபான்மை இருக்கிறார்கள் என்றாலும் கூட மத அடிப்படையிலான வாதம்தான் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. அதுதான் இந்தியாவிலும் இருக்கிறது.
எனவே, இந்தியாவில் மத அடிப்படையில் உள்ள அரசியலையே ஆர்.எஸ்.எஸ். உட்பட்ட சங் பரிவாரங்கள் கையிலெடுத்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. அரியானாவிலும் ஜெய்ப்பூர் சென்ற தொடர்வண்டியிலும் இசுலாமியர்கள் என்பதற்காகத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்கள் இன்ன மொழியைப் பேசக்கூடியவர்கள் என்பதற்காக அல்ல. அதேபோல, மணிப்பூரில் நடந்த வன்முறையிலும்கூட, மொழி வேறுபாடு இருந்தாலும் இன அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும், கிறித்துவர்கள், இந்துக்கள் என்கிற முரண்பாட்டைத்தான், பாஜக, சங் பரிவார் அமைப்புகள் கூர்மைப்படுத்தி, அங்கு மோதலுக்கு வழிவகுத்தன.
வன்முறைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும்கூட, அவர்களைப் பிளவுபடுத்துவதற்கு மதம்தான் மிக முக்கியமான கூறாக இருக்கிறது. இவை அனைத்தையும் அப்படியே திசைதிருப்பக்கூடிய வகையில், சீமான் அவர்களின் பேச்சு அமைந்திருப்பது அதிர்ச்சி அடிக்கிறது.
அவர் சங்பரிவாரின் அரசியலுக்கு, அந்த செயல்திட்டங்களுக்கு துணைபோகக்கூடிய வகையில் கருத்துகளைப் பேசிவருவது மிகவும் ஆபத்தானது.
இஸ்லாமிய சிறைவாசிகள் தொடர்பாக முதலமைச்சர் ஓர் குழுவை அமைத்திருக்கிறார். அந்தக் குழு அறிக்கை அளித்திருப்பதாகத் தெரியவருகிறது. அதன் மீது அவர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இசுலாமிய அமைப்புகள் மட்டுமின்றி விசிகவும் வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரையை நீதிபதி குழு அளித்திருக்கும் என நம்புகிறோம்.” என்றார்.