பார்முலா 1 கார் பந்தயத்துல மான், முயல்கூட வந்துரும்... விமர்சனங்களுக்கு உதயநிதி பதில்!

minister udhayanidhi
அமைச்சர் உதயநிதி
Published on

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றபோது பணியாற்றிய அரசுத் துறை பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், விமர்சனங்களை மீறி பார்முலா 4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்றார்.

”எந்த சர்வதேசப் போட்டி என்றாலும் சென்னையில் நடத்தமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான். மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் மிகுந்த பகுதியில் இந்த கார் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், அதனை படம்பிடித்து பெரிய செய்தியாக்கி விடலாம் என்றும் நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர். போட்டியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்றுகூட சிலர் திட்டமிட்டனர். ஆனால், கார் பந்தயம் ஒரு புறம் நடந்தபோது, மறு புறம் போக்குவரத்து சீராக இயங்கிக்கொண்டிருந்தது.” என்றும் அவர் கூறினார்.

அதைப் பார்த்த பிறகு, விமர்சனம் செய்தவர்கள்கூட பாராட்ட ஆரம்பித்துவிட்டதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். 

”சிறிய விபத்து நடந்தால் கூட அதை பெரிதுபடுத்த வேண்டும் என்று சிலர் காத்திருந்தனர். பந்தய தடத்திற்குள் நாய்க்குட்டிகள் ஓடி வந்ததைப் பார்த்து இது நாய் பந்தயமா? கார் பந்தயமா? என்று சிலர் விமர்சித்தனர். சென்னையில் நடந்தது பார்முலா4 கார் பந்தயம். பார்முலா1 கார் பந்தயத்தில் கூட சில நேரங்களில் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் உள்ளே வந்துவிடும். இதுபற்றி கூட தெரியாதவர்கள்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.” என்றும் உதயநிதி கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com