நிதிநிலை சீராகும்வரை அரசு ஊழியர்கள் பொறுத்திருக்க வேண்டும்- தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை சீராகும்வரை அரசு ஊழியர்கள் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ள போராட்டத்தைக் கைவிட்டு, பொறுமை காக்கவேண்டும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார். 

அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஜேக்டோஜியோ வரும் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது. அதையடுத்து கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று தென்னரசு உட்பட 3 அமைச்சர்கள் பேச்சுநடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அதையடுத்து, இதுகுறித்து அவர்  வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு பல நலன்களைச் செய்ததாகப் பட்டியலிட்டுள்ளது. 

அந்த அறிக்கையிலிருந்து...:

“ தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்துடனும், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்திடவும் பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 27,858 பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் கழக அரசு பொறுப்பேற்ற 2½ ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் குறைந்த பட்சம் 50,000 பேர்கள் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணி நியமனம் பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த விவரத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும், பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243 யினை நடைமுறை படுத்துவது குறித்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பல்வேறு வகைகளிலும் அரசு அலுவலர்களின் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேறு பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாடு சந்தித்த இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடர்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், அந்தப் பேரிடர் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கான எதிர்பாராத பெரும் செலவினங்கள், மேலும் இவற்றிற்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி ஏதும் பெறப்படாத நிலையில், அதனை மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாகவும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கான மாநில் அரசுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு ரூபாய் 20,000 கோடி நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளது. எனினும் அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையை சீர்செய்து உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம்

விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் அரும்பெரும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது.

எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கவேண்டும்.” என்று அமைச்சர் தென்னரசு தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com