அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்தது.
செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி மீது ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜிக்கு இருமுறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், 3-ஆவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
முன்னதாக, ஜன. 11-ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 15-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.