ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on

சிறைவாசம் இருந்துவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் இதயத்தின் மூன்று முக்கிய ரத்த நாளங்களில் பல்வேறு அடைப்புகள் செந்தில் பாலாஜிக்கு இருப்பது கண்டறியப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சில நாள்கள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், உணவு ஒவ்வாமையால் அவர் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று மாலை அழைத்து வரப்பட்டார். பொது மருத்துவம், இதய நல மருத்துவம், ஜீரண மண்டல நல மருத்துவர்கள் அடங்கிய குழு அவரை பரிசோதித்தது. சில முக்கியமான சோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளுக்காக ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு இதயம்-நெஞ்சக சிகிச்சை மருத்துவர்கள் அவரை சோதித்தனர். அதைத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com