ஆளுநரே வரச்சொல்லி கேட்டுக்கொண்ட பிறகும் முதலமைச்சராக இருப்பவர் அவரைச் சந்திக்காமல் இருக்கமுடியாது என சட்டத்துறை அமைச்சர் இரகுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்து தி.மு.க. கட்சியும் கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் விடுதலை நாள் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பது என முடிவுசெய்தன. ஆனால் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என அறிவிப்பு வந்ததை எதிர்க்கட்சித் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.
இதைப் பற்றி நாகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் இரகுபதி விளக்கம் அளித்தார். ”நாங்கள் வரமுடியாது என கட்சியின் சார்பில் சொன்ன பிறகு, ஆளுநர் மாளிகையில்இருந்து முதலமைச்சரைத் தொடர்புகொண்டு, கட்டாயம் நீங்கள் வரவேண்டும் என ஆளுநர் கேட்கும் நிலையில் முதலமைச்சராக இருப்பவர் அவரைச் சந்திக்காமல் இருக்கமுடியாது. பா.ஜ.க.வுக்கு எந்தக் காலத்திலும் பணிந்துபோகவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.” என்று அவர் கூறினார்.