உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக்கூடப் படிக்காமல், ஊராட்சி மன்ற தலித் தலைவர் பதவியேற்பு பற்றி அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார் என அமைச்சர் துரைமுருகன் என காட்டமாகக் கூறியிருக்கிறார்.
சில வாரங்களாகவே சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த தலித் ஊராட்சித் தலைவர் பதவியேற்பு விவகாரம் பற்றி சில நாள்களுக்கு முன்னர், ஆளுநர் ரவி குறைகூறிப் பேசியிருந்தார். அதற்கு இன்று காலையில் அமைச்சர் துரைமுருகன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து வழக்கு இருப்பதால், தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பொறுப்பேற்க இயலாத நிலை இருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவைக்கூட அறிந்துகொள்ள முயலாமல் தமிழ்நாடு அரசின் மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறுப் பரப்புரையை செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அரசியல்சட்டப் பதவியில் இருப்பவர் அரசியல் கட்சித் தலைவர் போல், குறிப்பாக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் போல் பேசி, தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கும் குந்தகம் விளைவித்து வருவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
இந்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது 7-10-2021 நாளிட்ட உத்தரவில் “(போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சேர்ந்தவராக இந்நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிற காரணத்தால் சம்பந்தப்பட்ட நபர் பொறுப்பேற்கக் கூடாது என்று தெளிவாக்குகிறோம்.) எனத் தெரிவித்திருந்தது என்றும், அதனால், ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் பொறுப்பை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை, பா.ஜ.க.வையும், அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்குப் பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே என்ற ஆதங்கம்தான் ஆளுநர் இப்படி பேச காரணமே தவிர, பட்டியலின - பழங்குடியின மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறை இல்லை. அப்படி அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராலம்” என்று சட்டம் பிறப்பித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளவர்களை கடிந்து கொண்டிருக்கலாம்.” என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
”பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வரும் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து உள்துறை அமைச்சரிடம் குரல் கொடுக்காத ஆளுநர், உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ள ஒரு ஊராட்சியை மட்டும் பற்றிப் பேசுவதன் உள்நோக்கம் என்ன? யாரை ஏமாற்ற இந்த நாடகமாடுகிறீர்கள்?
பட்டியலின - பழங்குடியினத்தவர் மீதான வன்முறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை பெறுவது 2013-2020 வரை 7.15 விழுக்காடாக இருந்த நிலை 2021-2023-இல் 9.12 விழுக்காடாக உயர்த்தியுள்ளது இந்த சமூகநீதி அரசுதான்!
ஆளுநர் உண்மைக்கு மாறான இத்தகைய பேச்சுகளைத் தவிர்த்து, மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கும், அரசு நிர்வாகத்தின் கோப்புகளிலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற அவர்கள் தொடர்பான லஞ்ச வழக்குகளில் கையொப்பமிடாமல் வைத்துள்ள (sanction of prosecution) கோப்புகளிலும் கையெழுத்துப்போடுவதில் தனது நேரத்தை உருப்படியாகச் செலவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும்.” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.