தீபாவளிக்கு பருப்பும் பாமாயிலும் உறுதியாக வழங்கப்படும் என்று உணவு அமைச்சர் சக்ரபாணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ரேசன் கடைகளில் துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக ஒரு நாளிதழில் சிறப்புச் செய்தி வெளியானது. அதற்கு அமைச்சர் சக்ரபாணி மறுப்பு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ துவரம் பருப்பும் பாமாயிலும் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்” என்று நேற்றுமுன்தினம் அமைச்சர் உறுதியாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பருப்பு விநியோகம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிட்டிருந்தார்.
அதற்கு விளக்கம் அளிக்கும்வகையில், உணவு அமைச்சர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என்னுடைய அறிக்கையைப் படிக்காமல் வானதி அறிக்கையை வெளியிட்டுள்ளார்; அவர் பார்வைக்கு என்னுடைய அறிக்கையை அனுப்பியுள்ளேன் என்று அமைச்சர் சக்ரபாணி கூறியுள்ளார்.
”அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று (15.10.2024)வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது; 2,04,08,000 பாமாயில் பாக்கட்டுகள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கட்டுகள் விநியோகப்பட்டுவிட்டன. மீதியுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன.” என்று அமைச்சர் சக்ரபாணி அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.