மிக்ஜம் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசின் குழு ஆய்வுக்கு பிறகு தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் மத்தியக் குழுவினர், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர்.
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வெள்ள பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினரிடம் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, மத்தியக் குழுவினர் மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு குழுவினர் வட சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்தியக் குழுவினர் பேசியது:
“மிக்ஜம் புயல், வெள்ள பாதிப்புகளை மிகச் சிறப்பாக கையாண்டதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். அதிக அளவிலான மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியது.
தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்த போதிலும், எதிர்பாராத விதமாக, புயல் சென்னை அருகே நீண்ட நேரம் மையம் கொண்டதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மிக விரைவாக இயல்பு நிலைக்கு சென்னை திரும்பியுள்ளது. அரசின் நடவடிக்கையால் உயிர்சேதம் மிகவும் குறைந்துள்ளது.
வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.” என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.