மெகா நிலக்கரி ஊழல்: அதானி மீது மீண்டும் ராகுல் குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி, அதானி
ராகுல் காந்தி, அதானி
Published on

அ.தி.மு.க. ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான ஊடகச்செய்தியைக் குறிப்பிட்டு, "பாஜக ஆட்சியின் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பினான்சியல் டைம்ஸ் ஏட்டில் வந்துள்ள செய்தியை இணைத்துள்ளார்.

“பா.ஜ.க. ஆட்சியில் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்துவரும் இந்த மோசடி மூலம் மோடியின் அபிமானத்துக்குரிய நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை போலி பில்கள் மூலம் மூன்று மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ளார்.

அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை ஆகியவை இந்த ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பினான்சியல் டைம்சில் வந்த அந்தச் செய்திக் கட்டுரையில், “2014ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 24 கப்பல்களில் கொண்டுவரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி மொத்தத்தையும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை கூடுதலாக அதானி நிறுவனம் விற்றுள்ளது. இப்படியாக, 2012 - 2016 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.6000 கோடி அளவுக்கு நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவில் ஒரு டன் ரூ.2,330 என்ற விலையில் கொள்முதல் செய்த நிலக்கரியை தமிழக அரசிடம் ஒரு டன் ரூ.7650 என்று விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது அதானி நிறுவனம்.” என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com