பொதுவாக மேயரைப் பற்றிதான் பேசுவார்கள். அவருடன் வருகிற டபேதாரைப் பற்றி யாரும் கவனிக்கக்கூட மாட்டார்கள். சென்னை மேயர் பிரியாவின் பெண் டபேதாரான மாதவி பரபரப்பாகப் பேசப்படுகிறார். அவரை விட அவர் பூசும் உதட்டுச்சாயம் பரபரப்பான பேசு பொருளாகிவிட்டது.
சென்னை மாநகராட்சியில் முதல் பெண் டபேதாராக நியமிக்கப்பட்டவர் எஸ்.பி.மாதவி. பிரியா மேயராக பதவியேற்றதில் இருந்து மாநகராட்சியின் பெண் டபேதாராக மாதவி இருந்து வருகிறார்.
இந்நிலையில், உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை முறையாக பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக மணலி மண்டல அலுவலகத்திற்கு அவரை பணியிட மாற்றம் செய்வதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவருக்கு ஏற்கனவே மெமோ அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த மெமோவில் பல்வேறு கேள்விகளுக்கு மாதவி பதிலளித்துள்ளார்.
அதில் குறிப்பாக, உயர் அதிகாரிகளின் ஆணையை உதாசீனப்படுத்துதல் என்ற கேள்விக்கு 'தாங்கள் எனக்கு என்ன ஆணை வழங்கினீர்கள்? நான் எந்த ஆணையை உதாசீனப்படுத்தினேன்? என்று விவரமாக கூறவும்' என பதிலளித்துள்ளார்.
அலுவலக நடைமுறைகளை மீறுதல் என்ற கேள்விக்கு ’என்னை உதட்டிற்கு பூசுகின்ற சாயம் போடக்கூடாது என்று கூறினீர்கள். நான் உங்களை மீறி பூசினேன். இது குற்றம் என்றால் எந்த அலுவலக ஆணையில் உள்ளது என்று தெரியப்படுத்தவும்' என அவர் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மணலி மண்டல அலுவலகத்துக்கு மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
லிப்ஸ்டிக் விவகாரத்தால் அவர் பணியிடம் மாற்றமா என்று மேயர் அலுவலகத்தில் கேட்கப்பட்டபோது இதற்கும் லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் பணிக்குத் தாமதமாக வந்தது போன்ற காரணங்களால் பணியிட மாற்றம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை டபேதார் மாதவி பணிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது, பெண் உரிமைக்கு எதிரானது என பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”மாதவி எந்த கலரில் வேண்டுமானாலும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். எந்த அரசாணையில் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளக்கூடாது என உள்ளது? நான் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள மாட்டேன். மாதவிக்கு சப்போர்ட் பண்ணுவதற்காக நான் லிப்ஸ்டிக் போட்டுப்போகப் போகிறேன்.” என்றார்.